தமிழீழம் பிரச்சனையை குறித்து இங்கு நான் விவாதிக்க போவது இல்லை .
நான் விடுதலை புலிகளிக்கு ஆதரவாளரும் அல்ல. இலங்கை அரசுக்கு எதிரியும் அல்ல. தமிழ்நாட்டின் எங்கோ ஒரு கோடியில் சினிமா, கிரிக்கெட் , வேலை, வீடு என அன்றாட வாழ்வை வாழ்ந்து கொண்டு இருக்கும் சாதாரண இளைய சமுதாயத்தில் ஒருவளின் எண்ண பதிவுகள் .
நானும் இத்தனை நாள் "இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்ல " என்ற பொன்மொழி படி வாழ்ந்து வருகிறேன்.
"தமிழீழம்" பிரச்சனை என்றால்.." அங்கு ஏதோ போர் நடக்கிறதாம்" என்று மட்டுமே தோன்றும் .
எதற்காக போர்? யாருக்கும் யாருக்கும்? இத்தனை நாள் இலங்கையில் என்ன நடந்தது? இந்த போரின் விளைவுகள் என்ன? இதை பற்றியெல்லாம் என்றுமே நான் யோசித்ததே கிடையாது. நம் வீட்டில், ஆபீஸில் இருக்கும் பிரச்சனைகளையே நம்மால் சமாளிக்க முடியவில்லையாம் , இதில் உலக பிரச்சனை பற்றி கவலை என்ன நமக்கு?
அனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆங்கில தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட சில காட்சிகள் நமது செய்திகளில் ஒளிபரப்பினர்கள் . அதை பார்த்த எனக்கு மிகவும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த பதிவை எழுதுவதற்கும் அதுவே மூல காரணம்.
இணையதளத்தில் அந்த காட்சிகளை தேடி பார்த்தேன். அதை பார்த்த எந்த ஒரு மனிதனுக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருக்காது . அப்பாவி மனிதர்கள் கொல்ல படும் நேரடி காட்சிகளை .காட்டினார்கள் . போர் இத்தனை கொடூரமானதா?
பெண்கள் , குழந்தைகள் என்று பார பட்சமே பார்க்காமல் கொன்று குவிக்கும் கொடிய அரக்கன் இந்த போர்.
உலகில் எந்த மூலையில் போர் நடந்தாலும் இது தான் நடக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இந்த போரின் பாதிப்பு மட்டும் ஏன் இவ்வளவு கொடுமையாக உள்ளது?
அதற்கு முன்பாக இலங்கையை பற்றி நான் மேற்கொண்ட ஒரு சிறிய தேடலை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.
இலங்கையின் வரலாற்றை பற்றி நான் சேகரித்த சிறு தகவல்கள் இதோ:
(குறிப்பு: வரலாறு அதை வடிபவர்களின் பார்வையை பொறுத்தே அமையும்)
இலங்கையில் தமிழர்களின் வரலாறு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்து வருகிறது. 6- ஆம் நூற்றாண்டில் தான் வங்க தேசத்திலிருந்து படையெடுத்து வந்த "சிங்கபுறத்து இளவரசர் விஜயன்" அங்கே இருந்த திராவிட மன்னர்களை எதிர்த்து போரிட்டான். (அன்று முதலே ஆரம்பித்து விட்டது தமிழர்களுக்கும் சிங்களவர்க்கும் எதிரான இந்த போர்)
தமிழ் அரசர்களும் சிங்கள அரசர்களும் மாறி மாறி போரிட்டு ஆட்சியை கை பற்றி கொள்ள முயன்று கொண்டிருந்த நிலையில் ... 13 ஆம் நூற்றாண்டு வாக்கில் , சிங்கள அரசர்கள் இலங்கையின் தெற்கு பகுதியில் தங்கள் ராஜ்யத்தை நிலை நாற்றினர். அன்று முதல் ஆங்கிலேயர்களின் வருகை வரை, தெற்கு பகுதிகளில் சிங்களவர்களும், வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தமிழ் அரசர்களும் தனி தனி நாடுகளாக ஆட்சி புரிந்து வந்தனர்.
சோழர் காலத்தில் கூட தமிழகத்தில் இருந்து ஈழம் சென்று போர் புரிந்த மன்னர்கள் பலர் உண்டு . கல்கியின் பொன்னியின் செல்வன் படித்தவர்க்கு , ராஜா ராஜ சோழன் ஈழம் சென்று போர் புரிந்த காலத்திலும் கூட அங்கே இருந்த மக்களின் அபிமானத்தை பெற்றிருந்தார் என்பது தெரியும் . அங்கே அவர் போர் புரிந்த காலத்தில் , போரினால் சேதம் அடைந்த புத்த விகாரங்களை அவரே மறு சீரமைப்பு செய்தார் என்பது குறிப்பிட தக்கது.
நம் தமிழக மன்னர்கள் போரில் வீரர்களாய் இருந்தாலும், கலையை மதிக்க தெரிந்தவர்களாய் இருந்தார்கள் . பகைவனின் கலை உணர்வை கூட மதித்த உன்னதமானவர்கள் நம் முன்னோர்கள் .
இந்த சூழலில் இலங்கையின் தெற்கே ஆண்ட சிங்கள மன்னர்கள் சிறிது முன்னேறி இலங்கையின் நடு பகுதிகளை ஆக்கிரமித்து "கண்டி" யை தங்கள் தலைநகரமாக கொண்டனர் . 25332 சதுர மையில்கள் பரப்பளவை கொண்ட இலங்கை ஒரு அழகிய செழிப்பான தீவாக விளங்கியது. வணிகம், விவசாயம் , நீர் வளமை , அந்த காலத்திலேயே சிறந்து விளங்கிய நீர் கால்வாய்கள், அடர்ந்த காடுகள், மலைகள் என்று செழிப்பாக இருந்தது . 10- ஆம் நூற்றாண்டில் வணிகர்களாக வந்து இறங்கிய இஸ்லாமியர்கள் தமிழை தங்கள் மொழியாய் ஏற்று கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் குடியேறினார்கள்.
16-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் போர்த்துகீசியர்கள் இலங்கையில் இறங்கினார்கள் . இங்கு வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தமிழர்களும் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் சிங்களவர்களும் தனி தனி ராஜியங்களாய், தனி கலாச்சாரங்களாக திகழ்ந்ததை கண்டு , சிங்கள மன்னர்களிடம் ஒப்பந்தம் மேற் கொண்டனர். 1619 இல் நடந்த போரில் , தமிழ் ராஜ்ஜியம் கைபற்றபட்டது. தமிழ் மன்னன் "சங்கிலி குமரன்" தூக்கிலிடபட்டான் .
ஆனால் , அதன் பின்னர் வந்த டச் மன்னர்கள் , இலங்கையை தனி தனி நாடுகளாகவே ஆட்சி புரிந்தனர். 1796 இல் வந்த ஆங்கிலேயர்கள், இலங்கையின் வரலாற்றை மாற்றி அமைத்தனர் . தாங்கள் ஆட்சி புரிவதற்கு சுலபமாக வேண்டும் என்ற காரணத்திற்காக இரண்டு நாடுகளையும் ஒன்றாக்கி "சிலோன் " என்று 1833 இல் ஒரு தனி நாடாக மாற்றியது .
In 1799 Sir Hugh Cleghorn, the first Colonial Secretary observed in the well known 'Cleghorn Minute', `two different nations, from very ancient period have divided between them the possessions of the island: the Sinhalese inhabiting the interior in its southern and western parts from the river Wallouve to that of Chillow, and the Malabars (the Tamils) who possess the northern and eastern districts. These two nations, differ entirely in their religion, language and manners.'
இரு வேறு நாடுகளை, இரு வேறு இனங்களை , இரு வேறு கலாச்சாரத்தை, இரு வேறு வரலாற்றை , தன் அரசியல் வசதிக்காக ஒன்றாக மாற்றியது ஆங்கிலேய அரசு. இன்று இலங்கையில் நடக்கும் இன வெறி படு கொலைகளுக்கு என்னை பொறுத்த வரையில் இதுவே வித்தாகும். 1805 ஆம் ஆண்டு ஆரோஸ்மித் என்ற ஆங்கிலேயர் வரைந்த இலங்கையின் வரைபடத்தின் படி ஈழம் தனி நாடாகவே சித்தரிக்க பட்டுள்ளது. அந்த வரைபடத்தை இதில் காணலாம்:
http://www.davidrumsey.com/luna/servlet/detail/RUMSEY~8~1~233057~5509638:Map-of-The-Island-of-Ceylon-Drawn-b
1820 களில் ஆங்கிலேயர்கள் இலங்கையின் மலை பகுதிகளில் காபி எஸ்டேட்களை அமைக்க ஆரம்பித்தனர். 1840 - 1850 களில் தமிழகத்திலிருந்து கோடிக்கனக்கான மக்கள் கொத்தடிமைகளாக கொண்டுவரப்பட்டனர். இவர்கள் பெரும்பாலும் நெல்லை, மதுரை, தஞ்சை பகுதிகளின் ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் ஆவர்கள். ஈழத்தை ஆண்ட வீர தமிழனின் வம்சாவளிகள் ஆங்கிலேயர்களின் கொத்தடிமையாக வாழ நேர்ந்த அவல நிலைமை ஏற்பட்டது.
காபி வியாபாரம் நஷ்டமடைந்த காலத்தில் , 1880 களில் தேயிலை தோட்டங்களை அமைக்க தொடங்கியது ஆங்கிலேய அரசு. இந்த காலகட்டத்தில், ஆங்கிலேய ஆட்சியின் அசுர ஆக்கிரமிப்பு குணம், தலை விரித்து ஆட தொடங்கியது. தமிழர்களை அடிமைகளாக்கி,அவர்களக்கு வாழ்வின் அன்றாட வசதிகள் கூட இல்லாத அளவில் , கொடுமை படுத்தியது.
தமிழர்கள் சொந்தமாக நிலமோ அல்லது வீடுகளோ வைப்பதற்கு தடைகளை விதித்தது ஆங்கிலேய அரசு.
இந்த நிலையில், தமிழர்களின் சாதி அமைப்பில் மேல் தட்டில் இருந்தவர்கள், ஆங்கில கல்வி முறையை தேர்ந்தெடுத்தார்கள். இதனால் தொழில்முறை மற்றும் வெள்ளை காலர் தொழிலாளர்கள் என்று ஒரு புதிய வர்க்கம் உருவானது . இலங்கை வரலாற்றில் இது ஒரு முக்கிய நிகழ்வாகும்.
"பிரித்தாளுதல் " முறையில் பெயர் போன ஆங்கிலேய அரசு, தமிழர்களுக்கு மாநில நிர்வாகத்தில் முக்கிய பங்குகளை வழங்க ஆரம்பித்தது . மாநில நிர்வாகத்தில் முக்கிய பதவிகளை வகித்தல், ஆங்கிலேய கல்வி முறையை தேர்ந்தெடுத்து மேல் தட்டு வர்க்கமாக உருவெடுத்தல், கிறிஸ்துவ மதம் பரப்பல் என்று தமிழர்களின் மீது சிங்களவர்க்கு வெறுப்பு தொடங்கியது. ஆங்கிலேயனின் எண்ணம் நிறைவேறியது.
1947 இல், இந்தியாவை விட்டு பாகிஸ்தானை பிரித்தெடுத்து சென்ற ஆங்கில அரசு, 1948 இல், இலங்கையில் தமிழருக்கு எதிரான தீ பொறியை விட்டு சென்றது. இன்று அந்த தீ பொறி , வெறி கொண்டு பல அப்பாவி மக்களை தனக்கு இரையாக்கி கொண்டுள்ளது .
இரு தனி நாடுகளின் வேற்றுமைகளை மதிக்கமால், அவர்களின் தனி பட்ட வரலாற்றை பொருட்படுத்தாமல் ஒன்றினைத்ததே ஆங்கிலேயன் செய்த பெரும் தவறு. ஒரு அழகான தீவான இலங்கையை ஒரு போர்க்களமாக மாற்றியது அந்த ஒரு அரசியல் முடிவு தான்.
இது நடவாதிருந்தால், தமிழீழம் இன்று ஒரு தனி நாடாக இருந்திருக்கும். தமிழர்களுக்கு என்று ஒரு தனி நாடு. இராமேஸ்வரத்திலிருந்து படகுகள் மூலமாகவே எளிமையாக ஈழத்திற்கு சென்று விடலாம் . (வெறும் 29 கீ மீ. தானே!) தமிழ் மீனவர்கள் எல்லையில் கொல்லபடுவார்கள் என்று அஞ்ச வேண்டியிருக்காது. எல்லாவற்றுக்கும் மேலாக லட்ச கணக்கான மக்கள் போரில் இறந்திருக்க வேண்டியதில்லை.
ஏதோ ஒரு உணர்வு இந்த போரின் கொடுமையை மட்டும் மனதின் ஆழம் வரை செலுத்துகிறது என்று முன்பு கூறினேன் அல்லவா ?
எங்கோ அமெரிக்காவில் ஒரு தெருவில் தொழில் நுட்ப நிறுவனத்தில் பனி புரியும் ஒரு தமிழர்,வழியில் ஒரு தமிழ் உணவகத்தை பார்க்கும் பொழுது தன்னை அறியாமல் முகம் மலரும் பொழுது..
புது தில்லியின் கூட்ட நெருக்கடியான சாலையோர கடைகளில் மண் பொம்மை விற்கும் ஒரு முதியவர், தனது செல்போனில் எம்.ஜி.ஆர். பாடல்களை கேட்கும் பொழுது...
பெங்களூருவில் ஆட்டோவில் செல்லும் பொழுது , உள்ளே ரஜினிகாந்த் படத்தை பார்த்ததும் .."அண்ணே ..நீங்க தமிழா? தலைவர் ரசிகனா ?" என்று முகம் மலர்ந்து கேட்கும் பொழுது..
இந்த பொழுதுகளில் ஏற்படும் அதே உணர்வு தான், பன் மடங்கு உயர்ந்து, வேதனையாய் , நெஞ்சில் வலியோடு அந்த கட்சிகளை பார்க்கும் பொழுது, ஒரு அம்மா .."ஐயோ ..இந்த குழந்தையை காப்பற்றுங்கள்" என்று அலறும் சத்தம் கேட்கும் பொழுது.. அந்த உணர்வே , நம்மால் எதுவும் செய்ய முடியவில்லையே என்று கூனி குறுகி வெட்கப்பட வைக்கிறது.
தமிழீழம் தனி நாடக மாறுமா? எனக்கு தெரியவில்லை, அதனால் மீண்டும் போர் வரலாம். அங்கே மக்கள் கொல்ல படாமல் இருந்தால் அதுவே போதும். மக்கள் அமைதியாக வாழ வேண்டும். நமது நாட்டில் பல்வேறு மொழிகள், கலாச்சாரத்துடன் நாம் அமைதியாக வாழவில்லையா? இலங்கையில் வெறும் இரண்டு மொழிகள் தானே? அவர்களால் ஏன் ஒற்றுமையாய் வாழ இயலவில்லை? ஆங்கிலேயன் தன் சுயநலனுக்காக பிரித்து ஆட்சி செய்தான். இதை உணர்ந்தாலே போதும்.
20000 ஆண்டு பழமை வாய்ந்த கலாச்சாரத்தை சேர்ந்த தமிழர்களுக்கு ஒரு நல்ல விடிவு காலம் வராதா? நம்ப தான் முடியும். என் எண்ணங்களை எதற்கும் பதிவு செய்யலாம் என்றே இதை எழுதினேன்.
நான் முன்பு கூறிய உணர்வு என்ன என்பது இப்பொழுது புரிந்திருக்கும்.
அதுவே .. "தமிழுணர்வு "
No comments:
Post a Comment