Pages

Tuesday, 20 August 2013

மாற்றம் ஒன்று தான் மாறாததா?

அம்மா, அப்பா,அத்தை, மாமா, தாத்தா என அனைவரும் இட்லி வேண்டும் என்றுவிட, எனக்கும் அண்ணனுக்கும் மட்டும் தோசை வாங்குவது என்று முடிவு செய்தேன். வீட்டின் அருகிலேயே இருக்கும் அந்த சிறிய ஹோட்டலுக்கு போகும் வழியில் எத்தனை இட்லிகள் என்று கணக்கு செய்து கொண்டிருந்தேன்.

அப்பாவுக்கும் மாமாவுக்கும் நாலு, நாலு என்று எட்டு. தாத்தா,அம்மா,அத்தைக்கு மூன்று மூன்று என்று ஒன்பது. "எதற்கும் ரெண்டு இட்லி எக்ஸ்ட்ரா வாங்கிட்டு வா " என்று அம்மா கடைசியில் எப்பொழுதும் சொல்லும் இட்லியும் சேர்த்து , மொத்தம் 19 இட்லிகள். ஒத்தை படை எண் என்றால் டிவியின் வாலியுமை கூட மாற்றும் நான், 20 இட்லிகள் வாங்கலாம் என்று முடிவு செய்தேன். 

உள்ளே நுழைந்ததும் இருந்த கூட்டத்தைக் கண்டு முகம் சுழித்தேன். பார்சல் வாங்கும் கவுன்டரில் ஒரு நீளமான வரிசை இருந்தது. அமர்ந்து சாப்பிடும் அளவு போதிய இட வசதி இல்லாததால், இங்கே அநேகமாக பார்சல் வாங்கவே வருவார்கள். இருக்கும் ஒரு 4-5 இருக்கைகளும் காலியாக இல்லை. நீண்ட வரிசையில் நின்று கொண்டே, அங்கும் இங்கும் நடமாடும் மனிதர்களை கவனிக்க தொடங்கினேன். 

எல்லோருடைய நடவடிக்கைகளிலும் ஒரு விதமான அவசரம் தெரிந்தது. ஹோட்டல் என்றாலே எல்லாரும் ஓடி கொண்டே தான் பரிமாற வேண்டும் என்பது நம் ஊரின் எழுத படாத விதி போலும்!  ஆனால் , உட்கார்ந்து உணவு உண்பவர்களும் அதே அவசரத்தோடு தான் இருந்தார்கள். இன்றைய உலகில் அவசரம் என்பது கூட ஒரு வகை வியாதி தான். 

அங்கே அமர்ந்திருந்த மீசை  காரர், மீசையில் சாம்பார் இருந்ததை கூட அறியாமல், ஹோட்டலை விட்டு அவசரமாக வெளியேறி கொண்டிருந்தார். ஆமை வேகத்தில் வரிசை நகர்ந்து கொண்டிருந்தது. எனக்கு முன்னால் நின்றவரோ, "பரோட்டா வாங்கவா இல்ல ஊத்தப்பம் வாங்கவா" என்று தன் போனில் பேசுவதாக நினைத்து உலகத்திற்கே அந்த முக்கியமான கேள்வியை கேட்கிறார்!

சலித்துக் கொண்டே திரும்பிய நான், சற்று தொலைவில் அந்த அம்மாவையும் சிறுவனையும் கண்டேன். அந்த பெண்ணின் முகத்தில் ஒரு பொலிவு,  புன்னகை, நிரந்திரமாக குடியிருப்பதை ஆச்சிரியத்துடன் பார்த்தேன். அவளும் அந்த சிறுவனும், அவள் மகனாக இருக்க வேண்டும், அப்படி என்னதான் பேசி கொள்கிறார்கள் என்று ஆர்வமாக இருந்தது. இத்தனை கூட்ட  நெரிசலிலும், அந்த காட்சி ஏனோ என் முகத்தை மலர செய்தது, ஒரு கூட்டமான பேருந்தில் , ஒரு மழலை சிரிப்பை பார்த்து, தன்னை மறந்து முகம் மலறுவது போல. 

வரிசையில் மெல்ல முன்னேறிக்கொண்டே அவர்களை பார்த்து கொண்டே இருந்தேன். அவர்களது உலகம் தனியாக இருந்தது. சுற்றி இருக்கும் இந்த மனிதர்களின் அவசரமும், எரிச்சலும் அவர்கள் முகத்தில் இல்லை. யாரோ ஒரு மனிதர் அந்த பெண்னிடம் எதையோ கேட்க வருகிறார். அவரின் முகத்தை என்னால் சரியாக பார்க்க முடியவில்லை. அந்த பெண்ணின் முகத்தில் மற்றும் ஏதாவது மாற்றம் தெரிகிறதா என்று பார்த்தேன். அந்த புன்னகை மட்டும் மறையவே இல்லை. 

வரிசையில் எனக்கு முன்னால் ஒருவர் மட்டுமே இருந்தார். அவர் இன்னும் பரோட்டவா உத்தப்பமா என்று முடிவு செய்யவில்லை போலும்.கவுன்டரில் இருந்தவர் , "சார் பரோட்டா முடிஞ்சுது சார்" என்று சொன்னதும் தான் எனக்கு உயிரே வந்தது. ஒரு வழியாக அவர் அரை மனதுடன் உத்தப்பம் வாங்க டோக்கன் வாங்கிவிட்டு சென்றார். நானும் பணத்தை கட்டிவிட்டு, டோக்கன் வாங்கிவிட்டு அந்த பெண்ணை நோக்கி சென்றேன்.

"சொல்லுப்பா ..என்ன வேணும்?"
"20 இட்லி.. 2 தோசை.."
"அவ்வளோ தானப்பா ?"
"ஆமா "

அதே புன்னகை.இட்லியை அவள் கட்ட ஆரம்பிக்கும் பொழுது , அந்த சிறுவன், சாம்பார் , சட்னியை கட்டிக் கொண்டிருந்தான். பாதி முடிந்ததும், உள்ளே சென்று, "அண்ணே ..ரெண்டு தோச ரெடியா " என்று கத்திக் கொண்டு வந்தான். இவனும் அந்த அம்மா வும் ஏதாவது பேச மாட்டார்களா என்று பார்த்து கொண்டே இருந்தேன். தங்களின் வேலைகளை பொறுமையாக, பேசாமலே செய்து கொண்டிருந்தார்கள் இருவரும். 

எல்லாம் கட்டி முடிந்த பிறகு , எனது பையில் பொறுமையாக எடுத்து வைத்தேன். இன்னும் பேசவில்லை அவர்கள் இருவரும். நான் கிளம்பும் சமயம் ஒருவர் வந்து , "சாம்பார் 20 பாக்கேட் இருக்கானு பார்த்துக்கோங்க " என்றார்.

"சார் கரெக்டா தான் சார் வெச்சிருக்கேன் " என்றான் அந்த சிறுவன் முதல் முறையாக அந்த ஆளை பார்த்து. 
"இல்ல இருக்கட்டும் சரியா தான் இருக்கும் " என்றேன்.
"அட.. எடுத்து ஒரு வாட்டி பாத்துக்கோங்க .." என்றார் அந்த ஆள். அவர் சூப்பர்வைசர் போலும். 

எடுத்து சரி பார்க்கும் பொழுது என் கை தவறி சாம்பார் பாக்கெட் கிழே விழுந்து தரை எல்லாம் சிந்தியது. எனக்கு மிகவும் சங்கடமாகி விட்டது. 
"ஐயோ .. சாரி.. " என்று பதறினேன்.
"சார்.. நீங்க சொல்லாம இருந்திருந்த ..இப்படி ஆகிருக்குமா ? " என்று அந்த சிறுவன் கோவமாக அந்த சூப்பர்வைசரை பார்த்து கேட்டான். 
"என்னடா வாய் நீளுது உனுக்கு? கஸ்டமர் முன்னாடி இப்படி தான் பேசுவியா ? அன்னைக்கு வாங்கினது பத்தல போல? "

அந்த பெண் , "சார்.. நான் பாத்துக்குறேன் சார்..நீங்க போங்க " என்று தன் கையை அந்த சிறுவனின் தோளில் வைத்தாள் . சூப்பர்வைசர் அமைதியாக நகர்ந்து போக, எனக்கோ குற்ற உணர்வால் செய்வதறியாமல் நின்றேன்.

"தெரியாம கை தவறி.. " என்று நான் ஆரம்பிக்க, 
"பரவாயில்லப்பா ..இதோ இன்னொரு பாக்கெட் கட்டி தர சொல்றேன் " என்றாள் சிரித்துக் கொண்டே. தரையை துடைத்து சுத்தம் செய்தாள் . சிறுவனின் முகத்தில் இன்னும் கோவம் தெரிந்தது. மறுபடியும் சாம்பார் பாக்கெட்டை கட்டிக் கொடுத்தான் . . 

இங்கே இருந்து உடனே சென்று விட வேண்டும் என்று தோன்றியது எனக்கு. பையில் வைத்து விட்டு, அவர்களை பார்த்து ஒரு முறை புன்னகைத்து விட்டு கிளம்பினேன். திரும்பி பார்க்காமல் , மிகவும் மெதுவாக அடி எடுத்து வைத்து சென்றேன். எனக்கு பின்னால், முதல் முறையாக , அவள் அந்த சிறுவனிடம் பேசுவதை கேட்டேன்..

"டேய் ..உள்ள அண்ணே சாப்பாடு எடுத்து வெச்சிருக்கு .. போய் சாப்பிட்டு வா.."

அது சரி. அம்மா வேற என்ன பேசுவாள்? 

No comments: