Pages

Saturday 24 October 2009

பெயர் சூட்ட பட வில்லை...

இன்று வெள்ளிக் கிழமை . நாளை தீபாவளி. பெண்களுக்கென்றே எழுதி வைத்திருக்கும் வேலை போல அம்மா வும் சித்தி யும் பலகாரம் செய்து கொண்டிருக்க.. அப்பா, சித்தப்பா, தாத்தா வீட்டின் வெளியே உரையாடிக் கொண்டிருந்தார்கள் . நானும் எனது அண்ணனும் டிவியில் சிறப்பு நிகழ்ச்சிகளை மாற்றி மாற்றிப் பார்த்து கொண்டிருந்தோம்.

அருகே இருந்த எனது செல் போன் ஐ எடுத்துப் பார்த்தேன் .
படு பாவி.
இன்று மெசேஜ் க்கு காசு எடுக்குறானே! மீண்டும் கீழே வைத்து விட்டேன்.

டிவி , கம்ப்யூட்டர், அரட்டை .. இவ்வாறு என் மதிய வேளை சென்று கொண்டிருக்க .. என் சித்தி என்னிடம் வந்து கூறினார்கள்

"கிளம்பு.. இப்போ ஒரு எடத்துக்குப் போறோம் "

"எங்கே? கோவிலுக்கா? ப்ளீஸ் வேண்டாம் சித்தி "

"கோவில் இல்லை.. ஆனா அதுவும் கோவில் மாதிரி தான்.. 'அன்னை ஆசிரமம்'

சற்று குழப்பமாக இருந்தது. அனாதை இல்லம், முதியோர் இல்லம், அவ்வளவாக சென்றதில்லை. அதன் பாதிப்பில் இருந்து மீளக் கடினமாக இருக்கும். என்றாலும் கிளம்பி சென்றேன்.

நகரத்தை விட்டு சற்றே தொலைவில் அடர்ந்த மரங்களின் நடுவே இருந்தது அந்த ஆசிரமம். "மனம் குன்றியவர்கள்" க்கான காப்பகம் அது .

அங்கே செல்லும் முன்பாகவே, 25 கிலோ அரிசி , பழங்கள் , துடைப்பதற்கு துண்டு போன்ற பொருட்களை வாங்கி சென்றோம்.

உள்ளே செல்லும் முன்னரே எனது அண்ணன் என்னை எச்சரித்தான்.

"அவர்களை பார்க்கும் போது.. மூன்றாவது மனிதனை பார்ப்பது போல பார்க்காதே, நம்முள் ஒருவனாக ப்பாரு " என்றான்.

ஆனால் அங்கே சென்றதும், என்னால் அவர்களை "நம்முள்"ஒருவராகப் பார்க்க முடியவில்லை.. ஏன் என்று கடைசியில் சொல்கிறேன்..


கிட்ட த்தட்ட 40 பேர். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதத்தால் மூளை பாதிக்க பட்டிருக்கிறது. சிலருக்கு முழு நேரமும் படுத்தே இருக்க வேண்டிய நிலை. முதியோர்கள், வாலிபர்கள் என அனைத்து விதமான மனிதர்கள்.
அங்கே - "Age no bar.. caste no bar.. religion no bar"

எங்களை அழைத்துச் சென்றவர் அருகிலயே நான் நின்று கொண்டிருந்தேன். ஒருவர் வெகு நேரமாக தோட்டத்தை சுத்தம் செய்து கொண்டே இருந்தார். நான் அருகில் இருந்தும் தன் தலையை நிமிர்த்தி கூட பார்க்காமல் சுத்தம் செய்து கொண்டே இருந்தார்.

"அவர் அப்படிதான்மா.. நாம நிறுத்துன்னு சொல்ற வரைக்கும் விடாம சுத்தம் செஞ்சுகிட்டே இருப்பார். அப்படி ஒரு வியாதி. "

நான் பதிலேதும் பேசாமல் சிறிது தூரம் நடந்தேன்.

கல்லை உடைக்க முயற்சி செய்து கொண்டே இருக்கும் இளைஞன், இலைகளை எண்ணி கொண்டே இருந்த பெரியவர் ... ஒருவர் பிராமணர், கிறிஸ்துவர், முஸ்லிம்..

அது ஒரு புதிய உலகமாக இருந்தது.. தீபாவளிக்கு "வேட்டைக்காரன்" படம் ரிலீஸ் ஆகவில்லை என்று கவலை இல்லை.. எஸ் எம் எஸ் கு காசு எடுக்கிறான் என்ற கவலை இல்லை.. மொழி, இனம், நிறம், ஜாதி, மதம் வேறுபாடுகள் இல்லாத உலகம்.. அனைவரும் "மனதால்" ஒன்றுபட்டு இருந்தார்கள்...

வெகு நேரம் அங்கே இருக்க முடியாமல், நாங்கள் கொண்டு வந்த பொருட்களைக் கொடுத்து விட்டு கிளம்பத் தயாரானோம்..

அப்போது ஒருவர்.. சிரித்துக் கொண்டே என்னை அருகில் அழைத்தார். தயங்கி நானும் அருகில் சென்றேன்.

எங்களோடு வந்தவர், "இவர் பெயர் சகாயம்.. பிறந்த மூணு மாசத்துல தொட்டில் இருந்து கீழ விழுந்து மூளை பாதிச்சிருச்சு.. பெத்தவங்க ஆபரேஷன் பண்ண காசில்லாம இங்க விட்டுட்டு போய்ட்டாங்க... இப்போ இவருக்கு 45 வயசு.. சகாயம்..
இவங்க கெளம்புறாங்க.. டாடா சொல்லு.."

என்னை பார்த்த சகாயம்.. கைகளை உயர்த்தி கூறினார்... "டாடா.. இறைவன் உங்க ஆசிர்வதிப்பார் "

மெல்லிய புன்னகையுடன் நான் அங்கிருந்து கிளம்பினேன்..

இப்பொழுது கூறுங்கள்.. நம்முள் ஒருவராக ஏன் அவர்கள் இல்லை ?

அவர்களால் டிவி, கம்ப்யூட்டர், செல் போன் இல்லாமல் வாழ முடியும்..

பணத்தால் அவர்களை மகிழ்விக்க முடியாது...

அவர்களுக்கு மத இன அடிப்படையில் மனிதனை வேறுபடுத்தி பார்க்க தெரியாது..

நம்மால் இவ்வாறு இருக்க முடியுமா? இது சாத்தியமா?

அவர்களா "மனம் குன்றியவர்கள்" !?

Sunday 18 October 2009

காத்திருங்கள் :)

எனது முதல் தமிழ் பதிப்பு ... விரைவில்..