Pages

Friday, 30 January 2015

மழை

"வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் அடுத்த 48 மணி நேரத்திற்கு கன மழை எதிர்ப்பார்க்கலாம் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது" 

சலிப்புடன் டிவியை அணைத்தேன். இந்த நாள் இப்படித் தொடங்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

மழை. இந்தப்  பாழாய் போன மழை இப்போது தான் வரும். வெளியே இருட்டி இருந்தது. இடி இடித்தது. காற்றில் ஈர பதம். எனக்குக் காய்ச்சல் வந்துவிடும் போல இருந்தது. இந்த நாள் எல்லாமே சரியாக நடக்கும் என்று கனவுக் கண்டேன். இந்த ஒரு நாள் தான். இனி எப்போ இந்த மாதிரி வாய்ப்பு கிடைக்கும். நாளை காலை அவள் வந்து விடுவாள். 

"அத்தை நான் பக்கதுல கடைக்குப் போய்ட்டு வரேன்"
"எந்தக் கடை?"
"இங்க தான் பக்கதுல.. காபிப் பொடி வாங்கனும்" (அப்படியே லைப்ரரி ..கொஞ்சம் பார்க்கில் நடை.. பக்கதுல சூடா சோளம்...ஆஹா..)
"பக்கத்துல தானே? சரி நானும் வரேன்"
"..." 

ஒவ்வொரு முறை நான் தனியே செல்ல முயற்சிக்கும் போதெல்லாம் இப்படி "சரி நானும் வரேன்" இல் மாட்டிக்  கொண்டு விடுவேன். ஆனால் இன்று எப்படி ஓர் அறிய வாய்ப்பு . எவ்வளவு நாள் இதற்காக நான் காத்துக் கொண்டிருந்தேன். என்னவெல்லாம் யோசித்து வைத்தேன். 

"அம்மா ரொம்ப நாளா திருச்செந்தூர் போகணும்னு சொல்லிட்டே இருக்காங்க.. இந்த சனிக்கிழமை போய்ட்டு வந்துரலாம்.. அடுத்த நாள் காலைல வந்துரலாம்.. என்ன?"
(இந்த வாய்ப்பு வாழ்வில் மிக அரிதாக வரும். நழுவ விட்டு விடாதே. என்ன செய்யலாம்.யோசி.)
"சனிக்கிழமை யா?"
"ஆமா..ஏன்?"
"இல்லைங்க .. அன்னைக்கு என்னால கோவிலுக்கு வர முடியாது"
"ஓ .."
"பச்.. என்ன பண்றது.. சரி.. நீங்களும் அத்தையும் போய்ட்டு வாங்க..நானும் கொஞ்சம் வீட்டுல ரெஸ்ட் எடுக்குறேன்"
இப்படியெல்லாம் பொய் சொல்லி இந்த நாள் எப்போ வரும் என்று காத்துக் கொண்டிருந்தேன். வெளியே சென்று பால்கனியில் நின்றேன். மழை விடாமல் பெய்துக் கொண்டிருந்தது. சாலை எங்கும் நீர் தேங்கி சாக்கடைகள் நிரம்பி வழிந்துக்கொண்டிருந்தது.

காலைல எழுந்ததும் தலைக்குக் குளிச்சிட்டு புது சாரி கட்டிக்கிட்டு..முதல் ல கோவிலுக்கு போகணும். அப்புறம் ரமணா மெஸ் ல டிபன். மசாலா தோசையும் காபி யும். அப்புறம் லைப்ரரி. மதியான சாப்பாடு கிருஷ்ணா கபே. அப்புறம் மாட்டினி ஷோ. சாயங்காலம் ரொம்ப தூரம் நடக்கணும். எங்கயாவது. நடந்துக் கொண்டே இருக்கணும்.தெப்பகுளம் போகணும். படியில உட்காரணும். மீனுக்குப் பொரி போடணும். இருட்டில தெப்பகுளம் எவ்வளவு அழகாக இருக்கும். நைட் கூட வெளியில சாப்டுக்கலாம். சமைக்கவே வேண்டாம். பாத்திரம் கழுவ வேண்டாம். வீட்டுக்கு வந்ததும் விடிய விடிய இளையராஜா பாட்டுக் கேட்டுட்டே புக் படிச்சுட்டே தூங்கணும்.

இந்த நாளின் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் நான் அல்டிமேட் ஸ்டாரை போல செதுக்கி வைத்திருந்தேன். ஆனால் இந்த மழை என் ஆசையில் மண்ணை வாரி போட்டு விட்டது. சமைக்கவும் பிடிக்கவில்லை. அழுக்குத் துணி மூட்டையாய் இருந்தது. துணி துவைத்தாலும் மழையில் காயாது. பால்கனியில் நின்று மழையை வெறித்துப் பார்த்துக் கொண்டே இருந்தேன். இந்தக் காற்றுழுத்தத் தாழ்வு மண்டலம் இன்றைகுக் தான் வரவேண்டுமா. சே. 

கீழே ரோட்டில் பள்ளிக்கு ரெயின்கோட் மாட்டிக்கொண்டு இரண்டு சின்ன குழந்தைகள் பள்ளிக்கு சென்றுக் கொண்டிருந்தார்கள். 

"ஹேய்.. அது அழுக்குத் தண்ணீ ..அதுல கால் வச்சா ஷு டர்ட்டி ஆகும்.. அம்மா திட்டுவா " ஒற்றை குடுமிப் போட்ட வாண்டு அதட்டியது.
"போடி..இத இப்டீ ஷு இருக்குல..அத.. தண்ணிக்குள்ள விட்டு கால வெளீல வெச்சு நடக்குறப்போ பாரேன்..தண்ணி புளுக் புளுக்னு வெளில வரும்.. நடக்குறப்போ சத்தம் கேட்குது பாரு.. சூப்பரா இருக்கும்" ரெட்டை குடுமியின் குரலில் அத்தனை உற்சாகம். தண்ணியில் குதித்து குதித்து சென்றது. 

வீட்டைப் பூட்டி விட்டுக் கிளம்பினேன். மழை எவ்வளவு அழகு என்பதை  எப்படி மறந்து போனேன்?!

No comments: