Pages

Wednesday 21 May 2014

விசுவநாதன், பி.காம்

சுற்றிலும் மலை சூழ்ந்து இருக்கும் அந்த அழகான இயற்கைக் காட்சி மனதிற்குக் குளுமையாக இருந்தது. மேக ராணி மலைப் படுக்கையில் துயில தயாராகிக் கொண்டிருந்தாள். இதுவே நான் ஆழியாருக்குப் போவது முதல் முறை. நிறைய அணைகளை பார்த்திருந்தாலும், ஆழியாரில் ஒரு ரம்மியம்  இருந்தது. பிரம்மாண்டமான மலைகளின் பள்ளத்தாக்கில் சற்றும் அசையாத நீர் தேக்கம் . ஒரு ஓவியத்தில் நீர் நிலை , நீல வண்ணமாக உறைந்திருப்பதுப் போல இருந்தது. இங்கே அமர்ந்து இந்தக் காட்சியை நாள் முழுவதும் காணலாம் போலும். இந்த நிசப்தம் பிடித்திருந்தது. 

என்னுடன் வந்திருந்தவர்கள் அணையின் அருகில் இருந்த கெஸ்ட் ஹௌசை காண்பதில் ஆர்வமாக இருந்தார்கள். அங்கே தான் ரவிச்சந்திரன் 1964 இல் "விசுவநாதன் வேலை வேண்டும்" என்று நடனமாடினார்.

வெளிச்சம் குறைய தொடங்கியதும், நாங்கள் கீழே இறங்கினோம். ஜனத் தொகை முழுவதும் கீழே அந்த பூங்காவில் தான் இருந்தது. எனக்கு அந்த பூங்காவில் ஒன்றுமே இயற்கையாக தெரியவில்லை. குப்பை, கூட்டம், சத்தம் என்று மேலே சொர்க்கம் போலவும், கீழே நரகம் போலவும் தோன்றியது எனக்கு. 

இந்த நரகத்தை வேகமாக கடந்து செல்ல வேண்டும். ஆங்காங்கே நிறைய குரங்குகள் வேறு சாப்பாடு பைகளை பறிப்பதற்காக காத்து கொண்டிருந்தன. இன்னும் வேகமாக நடக்க தொடங்கினேன். பாதையின் ஓரத்தில் கீழே ஒரு முதியவர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்ததை நான் கவனிக்கவில்லை. நான் அவரை கடந்து சென்றதும், ஏதோ முனுமுனுத்தார்.

எனது கால்கள் வேகமாக முன்னேறினாலும் , ஏதோ ஒன்று என்னை தயங்கி நின்று மறுபடியும் அவரை நோக்கி செலுத்தியது. அப்பொழுது தான் அவர், 

"அந்த ஒரு ரூபாய எடுத்து தாங்க" என்று முணுமுணுக்கிறார் என்று தெரிந்தது. அவருக்கு மிக அருகிலேயே ஒரு ரூபாய் நாணயம் ஒன்று கிடந்தது. ஆனால் அவரால் அதை எட்டி எடுக்க  முடியவில்லை. அதை எடுத்து அவர் கையில் வைத்தேன். "தூக்கி விட கூட ஆள் இல்ல" என்று சலித்துக் கொண்டார். அவர் அருகே சென்று இரு கைகளையும் பற்றி, அவரை தூக்கி விட்டு நிறுத்தினேன். முதல் முறையாக என்னை பார்த்த அவரது கண்கள், கலங்கின.

"வாட் இஸ் யுவர் நேம் ?" சட்டென்று இந்த கேள்வியை , அதுவும் ஆங்கிலத்தில் நான் எதிர்ப்பார்க்கவில்லை . என் பெயரை கூறினேன்.

"வேர் ஆர் யு ப்ரம் ?"

"மதுரை"

"ஓ ! டெம்பிள் சிட்டி! தட் இஸ் வொய் யு ஆர் லைக் திஸ் " என்று சிரித்தார்.

அவரை சிரிக்க வைத்து விட்டேன் என்று மனதிற்குள் பெருமிதப்பட்டுக் கொண்டேன்.

"மை நேம் இஸ் விசுவநாதன். 1972 பி.காம் டிகிரி ஹோல்டர் " என்று பெருமையாக  கூறினார். அவர் கண்கள் மீண்டும் கலங்குவதை கவனித்தேன். என்னால் என்ன செய்ய முடியும்? உதவியற்ற நிலையில் நான் தான் இருப்பது போல உணர்ந்தேன். இது போன்ற இன்னல்களை பணத்தால் தான் செரி செய்ய முடியும் என்று என் சராசரி மூளை சொன்னதைக் கேட்டு , அவர் கையில் சில ரூபாய் நோட்டை வைத்தேன்.

"நோ ! நோ ! ஐ டோன்ட் வான்ட் மனி !"

"இல்ல.. டீ சாப்பிடவாது வெச்சிக்கோங்க" என்று நான் இந்த பணத்தை பிச்சைப் போட  வில்லை என்பது போல் காட்டிக்கொண்டேன்.

"ஓ ..டீ க்கா? அப்டினா சரி" என்று வாங்கிக் கொண்டார்.

"ஐ டோன்ட் ஹாவ் எனிபடி . நோ பிரண்ட்ஸ் . நோ பாமிலி . மை லைப் இஸ் ஹாரிபள் . எத்தன கஷ்டங்கள் . நீங்க ஏன் நிக்குறீங்க? ஐ டோன்ட் வாண்ட் டு டிஸ்டர்ப் யு . வெல்கம் டு ஆழியார் . ஹாவ் எ நைஸ் டைம்." என்று கைக் கூப்பி விட்டு நடக்கத் தொடங்கினார்.

வாசலில் எனக்க நண்பர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். "மழை வேற வர மாதிரி இருக்கு..எங்க போய்ட இவ்ளோ நேரம்?"

வண்டியில் ஏறினேன். நாங்கள் சரியாக கிளம்பிய பொழுது பெரிதாக மழை பெய்ய தொடங்கியது. வண்டியில் ஒருவர் , "சே ! எப்படி மழை பெய்யுது.. பாவம் பா இந்த குரங்கு எல்லாம் மழை நேரத்துல எங்கே போகும்?" என்று வருத்தப்பட்டார்.

No comments: